Category: AI

சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்; – சிங்கப்பூரில் நடைபெற்ற தொழில்நுட்ப சட்டத் திருவிழா

கடந்த செப்டம்பர் 11,12 ஆகிய தேதிகளில், சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகமும் (SAL), சிங்கப்பூர் சட்ட அமைச்சகமும் (Ministry of Law) இணைந்து TechLaw Fest எனும் தொழில்நுட்ப சட்டத் திருவிழா ஒன்றை நடத்தியது.

அந்த நிகழ்ச்சி நிரலில் சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்தான கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. சிங்கப்பூர் அரசு, நீதிபதிகள், வழக்கு sரைஞர்கள், சட்ட நிறுவனங்கள் ஆகியன எப்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை உள் வாங்கி இருக்கிறார்கள். அந்த வழிமுறைகளையும், அது தொடர்பான நிரலிகள் என்னென்ன இருக்கிறது என்பதனை அறிந்து கொண்டு அவற்றையெல்லாம் தமிழ் கம்ப்யூட்டர் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் எனும் நோக்கில் அவ்விழாவில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தேன்.

techlawfest

 

இந்தச் சுற்றுப் பயணத்தில் இரண்டு நாள் விழாக்களில் நடைபெற்ற கலந்துரை யாடல்களும், நான் கண்ட சிறப்பு நேர்காணல்களும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தொடராகத் தொடர்ந்து வரும்.

Techlawfest ன் இரண்டாம் நாள் தொடக்க உரையை ஆற்றிய சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் க்வெக் மீன் லக்,
“இன்றைய காலக்கட்டத்தில் சட்ட சேவைகளை வழங்கும் விதத்தில் தொழில் நுட்பம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கி இருக்கிறது. இதன் மூலம் சட்ட சேவைகளை எல்லா நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் டிஜிட்டல் முறையில் வழங்கும் வாய்ப்பு களை நமக்கு அளித்திருக்கிறது, மேலும் அதன் செயல்திறன் மற்றும் செலவு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது இது சவால்களை ஏற்படுத்துகின்றன.
அதனால், வழக்கறிஞர்களும், சட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்ப அலைகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு அதன் வெவ்வேறு எல்லைகளில் அதன் விளைவாக ஏற்படும் நன்மைகளையும், திறன்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்ப அலையில் பயணிக்கும் போது யாரையும் விட்டு விடாமலும், சட்ட நிறுவனங்களைத் தொழில்நுட்ப ரீதியாக வலிமைப் படுத்தவும் இணைந்து செயல்பட வேண்டும்.

techlawfest

 

சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகம் (Singapore Academy of Law) Lawnet மூலம் வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. 1990 களில் கணினி பெரிதும் விரிவாகப் பயன்படுத்தப் படாத காலத்திலேயே LAWNET எனும் புரட்சிகரமான திட்டத்தைத் தொடங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தாற் போல புதுப்புது உள்ளடக்கங்களையும், புதுப்புது செயல்பாடுகளையும் சட்டத் தொழிலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தித் தயார் செய்து இத்தனை ஆண்டு காலம் வழங்கி வருகிறது.
எப்பொழுதும் வளர்ச்சி பெற்று வரும் தொழில்நுட்பங்களைத் தன்வசப் படுத்திக் கொள்ளும் சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகம் கடந்த ஆண்டு முதல் உற்பத்தி செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் செயல்கூறுகளை துணை கொண்டு Lawnet ஐ மேம்படுத்தத் தொடங்கினார்கள். அது முழுமை அடைந்து இன்று பயன்பாட்டுக்குத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். LAWNET AI சேவையை வழக்கறிஞர்கள் Lawnet மூலம் பயன் படுத்தலாம்.

சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகமும், தகவல் தொடர்பு ஊடக வளர்ச்சி ஆணையமும் இணைந்து GPTLegal பெரு மொழி மாதிரியை (Large Language Model) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது வழக்கறிஞர்களுக்கும் சட்ட நிறுவனங் களுக்கும் பல்வேறு வேலைகளை மிக எளிதாக முடித்துக் கொடுக்கும் திறன் கொண்டது. அரசின் ஆவணங்களை மற்றவர்கள் சரிபார்ப்பதற்கு e-Apostille சேவை 2025 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

அறிமுகப்படுத்தப்பட்ட Lawnet மற்றும் e-Apostille ஆகிய இரண்டும் சட்டமும் தொழில்நுட்பமும் இணைந்து நிறைய பயன்களை வழங்க முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இதுவே உண்மையான கூட்டு முயற்சிக்குச் சான்றாகும்.

இந்த techlawfest ஆனது இன்னொரு சிறப்பான பணியை செய்திருக்கிறது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், சட்டத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் கூடி கூட்டு முயற்சித் தத்துவத்திற்கு அடையாளமாக இருப்பது மட்டுமல்லாமல் சட்டம் மற்றும் தொழில்நுட்பம் இணைவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் மற்றும் நாம் அனைவரும் எதிர்கொள்கின்ற, எதிர்கொள்ளப் போகின்ற சவால்கள் குறித்து உரையாடுவது என்பது பல்வேறுபட்டத் தரப்பிலிருந்து மாறுபட்ட கோணங்கள் மற்றும் கருத்துகள் நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ள ஓர் வளமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தி ருக்கிறது.

techlawfest
இயோங் சீ கின்

அது மட்டுமல்லாது சட்ட சேவைகளில் தொழில் நுட்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பற்றியும் அதிலுள்ள நடை முறை இடையூறுகள் பற்றியும் நாம் அனைவரும் இணைந்து விவாதிப்பது என்பது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்” எனக் கூறினார்.

இந்த தொழில் நுட்பச் சட்டத் திருவிழாவில் (Techlawfest) பல்வேறு நிறுவ னங்களுக்கிடையே புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்து இடப்பட்டன.
சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகம் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல் நாள் நிகழ்ச்சியில், சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனும் தலைப்பில் சிங்கப்பூர் சட்ட அமைச்சகத்தின் இரண் டாம் நாள் அமர்வில் அமைச்சர் எட்வின் தாங் எஸ்.சி. சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற நீதிபதி அதித் அப்துல்லா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர், வெளியுறவு மற்றும் சட்டத்துறையின் துணைப் பொது ஆலோசகர் மைக் யெ ஆகியோர் கலந்து கொண்டு சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப பயன் பாட்டால் உள்ள நன்மைகள், இடையூறுகள் குறித்து கலந்துரையாடினர்!

சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே சட்டத்துறையில் Generative AI எனப்படும் உற்பத்தி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தல் குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்தின் தலைமைச் செயலர் இயோங் சீ கின் மற்றும் மைக்ரோசாப்ட் நிறவனத்தின் துணைத் தலைவர், வெளியுறவு மற்றும் சட்டத்துறையின் துணைப் பொது அலோசகர் மைக் யெ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் கலாச்சாரம், இனம், மற்றும் இளைஞர் துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறையின் இரண்டாம் அமைச்சர் எட்வின் தாங் மற்றும் சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதி அதித் அப்துல்லா உடனிருந்தனர்.

techlawfest
மைக் யெ

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகமும் (Singapore Academy of Law) மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து உற்பத்தி செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை முறையாகவும், அறத்துடனும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் கையேடுகளை தயாரித்து சட்டத்துறை சார்ந்தோருக்கு சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழக இணையத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக, முறையாக சட்டத்துறைச் சார்ந்த வினாக்களை வடிவமைத்து உள்ளீடு (Prompt Designing) செய்வது எப்படி? சரியான மற்றும் துல்லியமான பதில்களைப் பெற நாம் சுருக்கமாக எப்படி உள்ளீடு செய்ய வேண்டும். சரியான அணுகுமுறைகள் என்ன என்ன என்பதை விளக்கும் வீடியோ மற்றும் கையேட்டினை சிங்கப்பூர் சட்ட அமைச்கத்தின் இரண்டாம் அமைச்சர் எட்வின் தாங் பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பயிற்சிகள் மூலம் திறன் மேம்பாடு: இதுகுறித்து பேசிய சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்தின் தலைமைச் செயலர் இயோங் சீ கின் “உற்பத்தி செயற்கை நுண்ணறிவானது வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒரு திறமையான பங்காளனாக இருந்து சட்டத்துறை பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நாம் இதுவரை கண்டிராத அளவிற்கு துல்லியத்துடனும், நுட்பத்துடனும் பணிகளை தானியக்கியாக (Automate) ஆக்கி உதவுகிறது. இந்தக் கூட்டுச் செயல்பாடு மூலம் நாங்கள் கடைநிலைப் பயனர்களுக்கும் வளத்திற்கும் இடையே பாலமாக இருந்து பணியாற்றும் பிரிவுகள் வேறுபாடின்றி, திறன் மேம்படுத்தும் கருவிகளைக் கொண்டு அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு உலகில் உயரிய அறநிலையை முன்னெடுத்துச் செல்ல பயிற்சிகள் மூலம் துறைச் சார்ந்தோரை வலுப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தத் தெரிந்தவருக்கே முன்னுரிமை
மைக்ரோசாப்ட் நிறவனத்தின் துணைத் தலைவர், ஆசியவின் வெளியுறவு மற்றும் சட்டத் துறை துணைப் பொது அலோசகர் மைக் யெ பேசுகையில்,
”செயற்கை நுண்ணறிவு உற்பத்தியை மேம்படுத்துகிறது, தொழிலில் புரட்சி செய்கிறது. சட்டத்துறைப் போன்ற தொழில்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. போட்டி உலகில் நிலைத்திருக்கவும், வாடிக்கையாளர் களுக்கு நல்ல பயன்களைத் தரவும், வழக்கறிஞர்கள் தொழில்நுட்பத்தை எப்படி சரியான முறையிலும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இது இன்றியமையாதது ஆகும். அண்மையில் இருக்கும் நடைமுறைப் போக்கின் படி 77% சிங்கப்பூரைச் சார்ந்த நிறுவனங்களில் அதிக ஆண்டு அனுபவம் பெற்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தத் தெரியாதவர்களை விட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தெரிந்தவரைத்தான் பணியில் அமர்த்துகிறார்கள்.

சிங்கப்பூர் சட்ட அமைச்சகத்தின் சட்டத் தொழில்நுட்ப தளத்தில் (Legal Technology Platform) மைக்ரோசாப்ட் கோபைலட் இணைக்கப்பட்ட நிலையில், நாங்கள் சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்துடன் இணைந்து வழக்கறிஞர்களுக்கு அவர்கள் துறை சாரந்து உற்பத்தி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவையானத் திறன்களை வழங்கப் பயிற்சி அளிக்க மகிழ்ச்சி அடைகிறோம்” எனக் கூறினார்.

அங்குப் பகிரப்பட்டத் தகவல்களையும், சிறப்பு நேர்காணல்களையும் ஒரே இதழில் எழுத முடியாததால் அடுத்த அடுத்த இதழ்களில் தொடர்ந்து எழுதுகிறேன்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
நிறுவனர் – இயக்குநர்,
முரளிகிருஷ்ணன் சின்னதுரை மீடியாகார்ப்
படங்கள்: Singapore Academy of Law

Scroll to top